உணவுத் தீண்டாமை

Ashvamedha Yagna

இன்று நண்பர் ஒருவருடன் வெளியில் செல்ல நேர்ந்தது, காலையில் வெகுநேரம் கழித்து விழித்திருந்தேன், ஆதலால் சாப்பிடாமலே வெளியில் சென்று விட்டேன் திரும்பி வர மதியம் மூன்றுக்கு மேல் ஆகிவிட்டதால் பசி தங்காது வழியிலே சாப்பிடலாம் எனப்பேசி அசைவ உணவு சாப்பிடுவது எனவும் முடிவுசெய்தோம். வழியில் மாட்டுக்கறியில் செய்த உணவு விற்கும் உணவகத்தில் நிறுத்த கேட்டேன், நண்பரோ மருத்துமட்டுமின்றி “நாம் மாட்டுக்கறி உண்ணக்கூடாது” எனவும் எனக்கு அறிவுரை கூறினார்.அதாவது இந்த உணவு நம்மை போன்ற சாதியினர் உண்ணக்கூடாதான உணவென அவர் கூறியதாகவே எனக்கு பொருள்பட்டது, பிறகு அவர் விரும்பிய உணவை சாப்பிட வேண்டியதாகிற்று. எனக்கு புரிந்த மட்டில் இந்தியாவில் மட்டுமே இரு பிரிவு அசைவ உணவு உண்ணும் மக்கள் இருப்பதாக நான் அறிகிறேன், ஒன்று மாட்டுக்கறி அல்லாத பிற ஆடு, கோழி முதலான அசைவங்களை உண்ணும் இடைநிலை சாதி மக்கள் மற்றொன்று மாடுகளையும் சேர்த்து உண்ணும் பழக்கம் கொண்ட அடித்தட்டு மக்கள். மேலும் இந்த இரண்டு வகையிலும் சேராத ஒரு பிரிவினர் சைவ உணவு வகைகளை மட்டுமே சாப்பிடக்கூடிய மேல்தட்டு மக்கள். இது இந்து மதத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் அற்ப விடயம், உதாரணமாக ஜைன மதத்தினர் சைவ உணவை மட்டுமே உண்பவர்கள், கிருத்துவ மற்றும் இசுலாமிய மக்கள் அசைவ விரும்பிகள்.

முந்தைய காலகட்டத்தில் இந்து மதத்தில் அசைவ உணவுக்கு கட்டுப்பாடுகள் இருந்ததில்லை, பார்ப்பனிய மற்றும் பார்ப்பனிய அல்லாதோர் என்று வேறுபாடின்றி அனைவரும் இறைச்சியை உணவாக உண்டதாக அறியப்படுகிறது. அக்காலகட்டத்தில் புரோகிதர்கள் தொழில் செய்துவந்த பார்ப்பனிய மக்கள் அன்றாட உணவில் மாட்டுக்கறியையும் சேர்த்துக்கொண்டதாக, அண்ணல் அம்பேத்கர் “தீண்டத்தகாதவர்கள் யார்?” ( who were the shudras ) எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பசு என்பது நான்கு கால் பிராணிகள் என்று சம்ஸ்கிருத பொருள், பிற்காலத்தில்தான் பசுவென்பது கறவை மாடென குறிக்கும் பழக்கம் தோன்றியது. வேதகாலத்தில் புரோகிதர்களாக இருந்த பார்ப்பனிய மக்கள் யாகங்களை செய்து அதன் முடிவில் காணிக்கையாக நான்கு கால் பிராணிகளை குறிப்பாக அதிக அளவில் குதிரைகளை தீயிலிட்டு கொளுத்தி வந்தனர். இந்த யாகங்கள் செய்வதும் அதன் தொடர்ச்சியாக பசுக்களை தீக்கிரையாக்கும் போக்கும் அதிகரித்த நிலையில் தான், புத்த மதம் தோன்றுகிறது. அது மக்களுக்கு இவ்வாறு யாகங்கள் செய்வதும், பிராணிகளை தீக்கிரையாக்குவதும் வீணற்ற வேலையென பரப்புரை செய்கிறது. ஒரு கட்டத்தில் மக்கள் புத்த மதத்தின்பால் சாயத் தொடங்குகின்றனர். புத்த மதத்தின் வளர்ச்சி இந்து மதத்திற்கு ஒரு கலக்கத்தை உண்டு பண்ணுகிறது. அச்சமயம் புரோகிதர்கள் பிராணிகளை யாகத்தில் எரிப்பதை விடுத்தது தங்களை சுத்த சைவர்களாக காட்டிக்கொண்டது மட்டுமல்லாது பசுவினை புனிதமானவைகளாகவும் கருதத்தொடங்கினர். இதன் பிறகே சைவ உணவு மட்டுமே உண்ணும் ஒரு பிரிவு இந்து மதத்தில் உருவாகிறது.

இதன் தொடர்ச்சியாக, பிராமண மக்களின் சடங்குகளை பின்பற்றும் இடைநிலை வர்ண மக்கள் பசுவினை உண்பதை தவிர்க்கின்றனர். பிற்காலங்களில் நான்கு கால் பிராணிகளை குறிக்கும் பசு எனும் சம்ஸ்கிருத சொல் மாடுகளை குறிக்கிறது அதன் தொடர்ச்சியாக மாடு புனிதம் அடைகிறது இறுதியாக மாடுகளை உண்பவர்கள் தீண்டத்தகாதவர்களாக பாவிக்கப்படுகின்றனர்.

மேலும் பேசலாம்…

References:
[1] இந்து மதம் எங்கே போகிறது, அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார்
[2] இந்துத்துவ மாட்டரசியல், கீற்று வலைப்பூ