அவர்தான் பெரியார்

Dr. Ambedkar and Thanthai Periyar

பெரியார் சிலை குறித்த பிரச்சினைகளை ஒட்டிய நேரத்தில் ஆனந்த விகடன் ‘அவர்தான் பெரியார்’ எனும் பெயரில் சித்திரம் ஒன்றை வெளியிட்டு இருந்தது, அதனை என்னுடைய கட்செவியில் சுயவிவர படமாக வைத்திருந்தேன், கல்லூரி நண்பர் ஒருவர் இது குறித்து காட்டமான ஒரு விமர்சனத்தை என்மீது வைத்தார் மேலும் நான் விளக்கம் கொடுக்க விழைந்தபோது அவர் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. அவரும் சரி பிற பெரியார் எதிர்ப்பு நண்பர்களும் சரி சில பொதுப்படையான கேள்விகளை என்னிடம் கேட்பது உண்டு, அதற்கான பதில்களும், விளக்கங்களும் பல இடங்களில் பலரால் தரப்பட்டபோதும் மீண்டும் நான் பகிரக்காரணம் என் நட்பு வட்டத்தில் இருக்கும் பலருக்கு சென்று சேரும் எனும் நோக்கத்தில்தான்.

பெரியார் எதிர்த்தது இந்து மதத்தை மட்டுமா?

பெரியாரின் அடிப்படை எதிர்ப்பே சாதிய தீண்டாமைதான், மக்களை பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என கருதும் மனுதர்மத்தின் அடிப்படை கருத்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார், ஒரு மதமும் வேண்டாம், அது விஷம், அனைத்து மதமும் தூக்கி எறியவேண்டும், நான் எந்த மதத்திற்கும் எதிரிதான் என கொச்சி மாநாட்டில் அவரே கூறியுள்ளார்[1].

தள்ளாத வயதில் ஏன் கல்யாண ஆசை?

பெரியார் தனது கடைசி காலத்தை நெருங்கி கொண்டிருக்கையில் கழக சொத்துக்களை நம்பிக்கைக்குரியவரிடம் ஒப்படைக்க விரும்பினார், அரசியல் பிரவேசத்தில் தீவிரம் செலுத்திய அண்ணாவை தனது வாரிசாக அறிவிப்பதில் பெரியார் ஆர்வம் காட்டவில்லை, அர்ஜுனன், ஈ. வே. கி. சம்பத் ஆகியோரை வாரிசுகளாக அறிவிக்கும் முயற்சியில் தோல்வி கண்டார், திராவிட கொள்கைகளை ஏற்றுக்கொண்ட மணியம்மையே சரியான தேர்வாக இருக்குமென நம்புகிறார், அப்போதைய இந்து சட்டத்தின்படி பெண்ணை தத்தெடுக்க இயலவில்லை, இதன்பொருட்டே 1948 இல் 36 வயது மணியம்மையை பெரியார் மணக்கிறார் இதன் நீட்சியாக 1949 இல் அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் பிறந்தது[2].

தமிழையும், தமிழர்களையும் சாடினாரா பெரியார்?

மொழி சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் பெரியார், அதன்மீது வரவேற்பு இல்லாத காரணத்தால் மொழிபற்றில் ஒரு நெகிழ்வு தன்மை வேண்டுமென்றும், பழமையை கட்டிக்கொண்டு அழும் மொழி காட்டுமிராண்டி மொழியெனவும் விமர்சித்தார். இந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழியை அவர் கடுமையாக எதிர்த்த போதிலும் ஆங்கிலம் பொருளாதாரரீதியில் அடுத்த கட்டத்தை அது ஒரு கருவியாக இருக்குமென அவர் உறுதியாக நம்பினார்[3].

பார்ப்பனரை மட்டும் எதிர்த்தாரா பெரியார்?

“பாம்பை கண்டால் விடு, பார்ப்பானை கண்டால் விடாதே” எனும் செய்தி எந்த முறையான ஆவணங்களும் இல்லாமல் பரப்பப்படும் பொய் செய்தி. பார்ப்பனியத்தை எதிர்த்த அவர் எந்த தருணத்திலும் பார்ப்பனிய மக்கள் மீது எந்த எதிர்ப்பையும் தெரிவித்தது இல்லை. பார்ப்பனிய மக்கள் தங்களை பிறப்பால் உயர்வாய் கருத்துவதைத்தான் நான் எதிர்க்கிறேன் அவர்கள் நல்வழியில் பொருளீட்டுவதோ அதன்மூலம் மேன்மை அடைவதையே நான் ஒருபோதும் எதிர்க்கவில்லை என அவர் தனது எழுத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறார்[3].

1944 ஆம் ஆண்டில் ஆங்கில பத்திரிக்கையாளர் பீவர்லி நிக்கலஸ் எழுதிய இந்தியாவின் தீர்ப்பு எனும் புத்தகத்தில் 32 ஆம் பக்கத்தில் “பாம்பை கண்டால் விடு, பார்ப்பானை கண்டால் விடாதே” எனும் சொல்லாடல் முன்பிருந்தே வழக்கத்தில் இருந்ததாக சுட்டி காட்டுகிறார்[4][ Download Verdict of India by Beverley Nichols from Internet Archive ].

பார்ப்பனிய எதிர்ப்பு கருத்தை திணித்தாரா பெரியார்?

பெரியார் ஒருபோதும் தனது சொந்த கருத்துக்களை திணிக்க முயன்றது இல்லை, அவரது கூட்டத்தில்கூட பேச்சை நிறைவு செய்யும் போது, “நான் சொல்வதால் மட்டும் எதையும் நம்பிவிடவேண்டாம், உங்களுக்கு ஏற்புடையதாய் இருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ளுமாறு” கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தார்[5].

தன்மீதான கருத்துக்களுக்கும், விமர்சனங்களுக்கும் அவர் எதிர்வினையாற்றியதில்லை மாறாக அதை அவர் வரவேற்கவே செய்தார், விமர்சனம் செய்வது அவரவர் உரிமை என்பதில் தீர்க்கமாக இருந்தார்[3].

தலித் மக்களுக்கு விரோதமாக செயல்பட்டாரா பெரியார் ?

இதுவும் பெரியார் மீதி வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டே, அண்ணல் அம்பேத்கரின் மீது பெருமதிப்பு கொண்டிருந்த பெரியார், அண்ணல் அம்பேத்கரின் “சாதியை ஒழிக்கும் வழி” நூலை பெரியார் தமிழில் மொழி பெயர்த்தார், தனி வாக்காளர் சட்ட வரையறையை எதிர்த்து காந்தியடிகள் உண்ணாநிலைப் போராட்டத்தினை செய்தபோது அதை கண்டித்ததோடன்றி அம்பேத்கருக்கு ஆதரவாகவும் நின்றார்[6].

பெரியாரின் ஐரோப்பிய பயணத்தின் பிறகு இலங்கையில் சில காலம் தாங்கியவர் ஆதிதிராவிட அபிவிருத்தி சங்கத்தார் அளித்த வரவேற்பு கூட்டத்தில் பேசிய எஸ். ஆர். முத்தையா, பெரியாரது தாழ்த்தப்பட்டோருக்கான போராட்டங்கள் தங்களுக்கு விடுதலை மற்றும் சுதந்திரம் தரக்கூடியது எனவும் தங்கள் சமூகம் அவரை மறக்காது எனவும் கூறினார்[6].

1932 இன் இறுதியில் சென்னை வந்தடைந்த பின், பெரியாருக்கு நடந்த முதல் வரவேற்பு நிகழ்வில் ஆதிதிராவிடர் சங்கமும், தாழ்த்தப்பட்டோர் தொண்டர் படையுமே கலந்துகொண்டது[6].

1939 ஆம் ஆண்டு பெண்கள் மாநாட்டில் மீனாம்பாள் அம்மையார்[see image], ஈ.வே.ரா அவர்களை பெரியார் என முதன்முதலாக அழைத்து அவரது போராட்டங்களுக்கும், சேவைகளுக்கும் பெருமை சேர்த்தார். இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று மீனாம்பாள் அம்மையார் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பது. ஒருவேளை பெரியார் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு விரோதமான செயல்களை செய்திருந்தால், அச்சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்மணியால் இவ்வாறு பெருமைப்படுத்த பட்டிருக்கமாட்டார்[7].

பெரியாரின் எல்லாக் கருத்துக்களும் எல்லோருக்கும் ஏற்புடையதாக இருக்க வாய்ப்பில்லை ஆனால் சாதியம் குறித்த அவரது கருத்துக்களுக்கு செவிசாய்ப்பது எல்லா வகையிலும் ஏற்புடையதே.

பெரியாரையோ அல்லது அவரது கருத்துக்களையோ எதிர்ப்பவர்கள் வெறும் கட்செவி, முகநூல் ஆதாரத்தை வைத்துக்கொண்டு பேசுவதைவிட, உண்மையில் ஒரு கருத்து எப்போது சொல்லப்பட்டது ? எந்த நிலையில் சொல்லப்பட்டது என ஆராய்ந்து பேசுவது சிறந்ததாக இருக்கும். உங்களுக்கு கேட்க வினா இருந்தால் கமெண்டுகளாக பதிவிடவும்.

ராமநவமி சிறப்பு கட்டுரையில் வரும் ஞாயிறு சந்திப்போம்.

References
  1. Times Of India, Periyar, Babasaheb opposed religious sanction for caste
  2. The News Minute, The September which split Dravidians: Periyar weds Maniyammai, DMK is born
  3. ஆனந்த விகடன், இந்து மதத்தை மட்டும் எதிர்த்தாரா… தமிழர்களை காட்டுமிராண்டி என்றாரா..? – பெரியார் குறித்த வதந்திகளும் உண்மைகளும்.
  4. விடுதலை நாளிதழ் முகநூல் பதிவு
  5. தி இந்து, பெரியார்: சாதி ஒழிப்புச் சூரியன்!
  6. வே.மதிமாறன், பெரியார்: தலித் விரோதியா?
  7. Red production, ஆல்ஃபா மனிதன். மரு. ஷாலினி, மனநல மருத்துவர்.