ம(ர)த யாத்திரை

மஹாராஷ்டிரத்தை தலையாகக்கொண்ட ஸ்ரீ ராமகிருஷ்ண மிசன் யூனிவேர்சல் சொசைட்டி எனும் இந்து அமைப்பு, ஒரு ஆன்மீக யாத்திரைக்கு ஏற்பாடு செய்கிறது, அதன் படி ஒரு ரதமானது பிப்ரவரி 13 அன்று உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியாவிலிருந்து புறப்பட்டு மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகா, கேரளா வழியாக வந்து தமிழகத்தின் ராமேஸ்வரத்தை வந்தடைந்து, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில் வழியாக சென்று கேரளத்தின் திருவனந்தபுரத்தில் தனது பயணத்தை முடித்துக்கொள்கிறது[1][2].

மற்ற மாநிலங்களில் சாதாரண ஒன்றாக கடந்துபோன ரதயாத்திரை தமிழகத்தில் பெரிய பேசுபடு பொருளாக மாறியதற்கான காரணம் தமிழ் தேசிய மற்றும் திராவிட கருத்துக்களை அடிப்படியாக கொண்ட கட்சிகளின் எதிர்ப்பினால்தான் என்றால் சற்றும் மிகையாகாது என்றாலும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஆதரவுடன் நடைபெறும் இந்த ரத்தயாத்திரை சில கோரிக்கைகளை அழுத்தமாக வலியுறுத்துகிறது, இந்த கோரிக்கைகளில் இந்துத்துவ சித்தத்தந்தம் மேலோங்கியிருப்பதே தமிழகத்தில் எதிர்ப்பு குரல் மேலோங்கிட முதன்மைக்காரணம் .

ராமராஜ்ய ரதயாத்திரை வலியுறுத்தும் சில கோரிக்கைகள்[3]:

  • இராம இராஜ்யத்தை மறுநிர்மாணம் செய்வது
  • பாடத்திட்டத்தில் இராமாயணத்தை இணைப்பது
  • இராமஜன்ம பூமியில் இராமர் கோவில் கட்டுவது
  • வியாழக்கிழமையை வாரவிடுமுறை நாளாக அறிவிப்பது
  • உலக இந்து நாள் அறிவிப்பது

ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத்

1925 செப்டம்பர் 27 அன்று கேசவ பலிராம் ஹெட்கேவார் தனது வீட்டின் சிறிய அறையில் ஒரு தீர்க்கமான முடிவுடன் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கிறார், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் எனப் பெயர் சூட்டுகிறார். ஆர். எஸ். எஸ்ஸின் அடிப்படை சித்தாந்தமே மதத்தை முன்வைத்த ஒரு அரசியல் பாதையை அமைப்பதே[4]. 1940-ல் ஹெட்கேவார் மரணத்திற்கு பின் அவரால் கைகாட்டப்பட்ட மாதவ சதாசிவ கோல்வால்கர் ஆர். எஸ். எஸ்ஸின் தலைவர் ஆகியிருந்தார்[5].

காந்தி கொலையும், ஆர். எஸ். எஸ்ஸின் தடையும்

கோட்ஸேவும், ஆர். எஸ். எஸ்ஸும்

ஆர். எஸ். எஸ்ஸின் தொடக்ககால உறுப்பினரான நாதுராம் விநாயக் கோட்சே, தனது இளமைப்பருவத்தில் சாவர்க்கரின் இந்து மகா சபையில் இணைந்து பணிசெய்கிறார், ஆர். எஸ். எஸ் காரர்களை காட்டிலும், சாவர்க்கரை தீவிரம் மிக்கவராக கருதுகிறார் ஆனால் காந்தி கொல்லப்பட்ட சமயத்தில் அவர் ஆர். எஸ். எஸ். அமைப்பில் உறுப்பினராக இல்லை, இதனை நீதிமன்றமும் பின்னாளில் உறுதி செய்தது.

ஆர். எஸ். எஸ் மீதான தடை

ஜனவரி 30, 1948 காந்தி கொலைக்கு பிறகு, ஆர். எஸ். எஸ்ஸில் பதற்றம் பற்றிக்கொள்கிறது, காரணம் ஆர். எஸ். எஸ்ஸின் நிறுவனர் மற்றும் பல தலைவர்கள் அனைவரும் பிராமணர்கள். மக்களின் சந்தேகம், கோபமாக மாறி ஆர். எஸ். எஸ் சம்பந்தப்பட்ட அலுவலகங்களும், முக்கியத் தலைவர்களின் வீடுகளும் சேதம் செய்யப்படுகிறது, அமைப்பின் தலைவர் கோல்வால்கர் சிறையிலடைக்கப்படுகிறார், இறுதியாக பிப்ரவரி 4, 1948 அன்று அன்றைய நேரு தலமையிலான அரசு தடைவிதித்து ஆணைப் பிறப்பிக்கிறது, பல போராட்டங்களுக்கு பின் 1949, ஜூலை மாதம் சில நிபந்தனைகளுடன் ஆர். எஸ். எஸ் மீண்டு வந்தது தனிக்கதை.

விஷ்வ ஹிந்து பரிஷத் தோற்றம்

ஆர். எஸ். எஸ் ஒரு போதும் மதம் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாக வைக்கவில்லை, அவர்களின் கருத்துக்கள் வெகுஜனத்தை சென்றடைய அனைத்து மக்களையும் அரவணத்தே சென்றது. 1964 ஆம் ஆண்டு சிவசங்கர ஆப்தே தலைமையில் மத நடவடிக்கைகளை கண்கானிக்க நிறுவப்பட்டதே விஷ்வ ஹிந்து பரிஷத், இது வெளிப்படையாகவே தன்னை இந்து மதத்தையும் அதன் கோட்பாடுகளையும் தூக்கிப்பிடிக்கும் அமைப்பாகவும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அமைப்புகளுக்கு எதிர்வினையாற்றும் அமைப்பாகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டது[7].

இராம ராஜிய ரதயாத்திரை எதிர்ப்பின் அடிப்படை

சரியாக 18 ஆண்டுகளுக்கு முன் 1990 ஆம் ஆண்டு ஆர். எஸ். எஸ்ஸால் வழிநடத்தப்பட்ட ரதயாத்திரை மசூதி இடிப்பில் முடிந்ததோடு மட்டுமல்லாது, கலவரங்களுக்கும் வித்திட்டது என்பதை மறந்திட இயலாது, இதனை முன்னிறுத்தியே தமிழகத்தில் அதிக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவே நான் அவதானிக்கிறேன் மேலும் இந்நிகழ்விற்கு சில நாட்களுக்கு முன் பா.ஜ.க கட்சியின் தேசிய செயலாளரின் ஒற்றைச் சிந்தாந்த கருத்துகளும் இந்த கட்டற்ற எதிர்ப்பின் அடிப்படையாக அமைந்துவிட்டது.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சங்க பரிவார் அமைப்புகளையோ ஒரு கட்டுரையில் விளக்கிட இயலாது, ஆர்.எஸ்.எஸ் பற்றிய மேலோட்டமான அடிப்படை கருத்துக்கள் மட்டுமே இக்கட்டுரையில் பகிறப்பட்டுள்ளது. ஆர். எஸ். எஸ் தன்னை சுதந்திரப் போராட்டத்தில் பெரிதாக ஈடுபடுத்திக்கொள்ளவில்லையென்றாலும் கோவா இணைப்பு, இந்திய-சீனப் போர், இந்திய-பாகிஸ்தான் போரின்போது அவர்கள் செய்த சேவை போற்றுதலுக்குறியதே, ஆர். எஸ். எஸ். காரர்கள் தங்களது தேசபக்திக்கு பூசும் மதச்சாயமே அச்சம் கொள்ளக்கூடியது.

கற்றதும், பெற்றதும்

இந்த எதிர்ப்பினால் நாம் எதையும் பெற்றதாக தோன்றவில்லை மாறாக நாமே அவர்களுக்கு பிரபல்யம் தேடித்தந்ததாகவே தோன்றுகிறது. பெருவாரியான மக்களின், அரசியல் அமைப்புகளின் நெருக்கடிக்கு ஆளும் மாநில அரசு ஒரு துளியும் செவிசாய்க்கவில்லை.
ஆளும் நடுவண் அரசோ அல்லது அதற்கு தொடர்புடைய அமைப்புகளோ ஆற்றும் வினைகளுக்கு, நாம் தொண்டை கிழிய எவ்வளவு கத்தினாலும் ஆளும் மாநில அரசு ஒன்றும் செய்யப்போவதில்லை எனும் படிப்பினைதான் இந்த ரதயாத்திரையை ஒட்டி பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவிலும், மாநில அரசின் நிலைப்பாடிலுமிருந்து நாம் கற்றவை.

References:

[1] இராமராஜ்ஜிய இரத யாத்திரை, நாம் தமிழர் கட்சி வலைப்பதிவு

[2] VHP’s ‘Ram Rajya Rath Yatra’ continues journey through Tamil Nadu, News article from DNA India

[3] மார்ச் 20 இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல், கீற்று வலைப்பதிவு

[4] பக்கம் 23, ஆர்.எஸ்.எஸ் மதம், மதம் மற்றும் மதம், பா. ராகவன், கிழக்கு பதிப்பகம்.</span

[5] பக்கம் 35, ஆர்.எஸ்.எஸ் மதம், மதம் மற்றும் மதம், பா. ராகவன், கிழக்கு பதிப்பகம்.

[6] பக்கம் 30-40, ஆர்.எஸ்.எஸ் மதம், மதம் மற்றும் மதம், பா. ராகவன், கிழக்கு பதிப்பகம்.

[7] பக்கம் 53, ஆர்.எஸ்.எஸ் மதம், மதம் மற்றும் மதம், பா. ராகவன், கிழக்கு பதிப்பகம்.