மகளிர் தினச் சிறப்பு கட்டுரை

பதின்ம வயதில் ஒரு ஆணோ, பெண்ணோ தத்தம் எதிர் பாலினர் தம்மீது ஈர்ப்பு கொள்வதை ஒரு கிளர்ச்சியாக உணரும் பருவம், தனது வகுப்பு தோழமையுடனோ அல்லது பொதுவெளியில் பார்த்து பழகிய எதிர் பாலினத்தவர் மீதோ, ஈர்ப்பினில் பழக ஆரம்பித்து பின்பு காதல் கொள்கின்றனர். இந்த நட்பு அவர்களது வர்க்கநிலை சரிசமாகவோ அல்லது பழக்கத்தின் தொடக்கத்தில் இருந்தது போலவோ இருக்கும் வரை நன்றாகவே செல்கிறது, உறவிலுள்ள ஏதேனும் ஒருவர் வர்க்கநிலை மாற்றத்தினால் இடமாற்றம் அடையும் போது பொதுவாக அச்சூழ்நிலைக்கேற்றார் போல மனமாற்றம் ஏற்பட்டு அதன் விளைவாக பழைய உறவுகள் மற்றும் பழக்கங்களை உதறித்தள்ளும் நிலைக்கு அந்த ஆணோ அல்லது பெண்ணோ தள்ளப்படுகிறார்கள், ஆனால் இந்த மாற்றத்திற்கு பிறகு அவதிக்குள்ளாவதும், வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதும் பெரும்பாலும் பெண்கள் மட்டுமே.ஒரு பெண் தனது பள்ளி பருவ இறுதியில் ஒரு ஆணுடன் அன்பு பாராட்டுகிறாள் பின் இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் அவள் அதன் மூலம் பெருநகரங்களில் தங்கி படிக்கவும் அதன் தொடர்ச்சியாக மேற்கத்திய நாகரீகத்தின்பால் ஈர்ப்பு கொண்டு தன் வர்க்கநிலையையும் மாற்றி அமைத்துக்கொள்கிறாள், மறுபக்கம் இவளுடன் பழக்கத்தில் இருந்த ஆணோ தேர்வில் தோல்வி அடைகிறான் தன் நிலையில் அங்கேயே தேங்கி நிற்கிறான். புது சூழலில் அவள் அவளது நிலைக்கு ஏற்ற அல்லது தன்னை உளவியல் ரீதியாக புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட ஆணுடன் நட்பு பாராட்ட தொடங்கலாம். அது பழைய ஆண் நண்பருக்கு ஒருபோதும் ஏற்புடையதாக இருக்காது, இவளது வழியில் குறுக்கிடுவது, புது உறவில் சிக்கல்களை உண்டுபண்ணுவது, அவளை கீழ்த்தரமாக சித்தரிப்பதென அவனது செயல்கள் தொடங்கும். இத்தருணத்தில் தான் அவளுக்கு செய்த பழைய உதவிகள், செலவுகளை சுட்டி காட்ட தொடங்குவான். ஒரு ஆண் தான் ஈர்ப்பு காட்டும் பெண்களுக்கு வெறுமனே செலவு செய்வதில்லை, அவளை இதன் மூலம் தனது காதல் வலையிலோ அல்லது உடலியல் தேவைகளை அவள் மூலம் சாதித்துக்கொள்ளவோதான் செய்கிறான். சரி மீண்டும் கதைக்கு வருவோம், அவன் தான் செய்ததை சுட்டிக்காட்டும் போது அவள் அதற்கு கைம்மாறு செய்வதாய் எண்ணி அவற்றை திரும்ப தந்துவிடுகிறேன் என் வாழ்வில் வராதேயென காட்டமாய் பதில் தரும் தருணத்தில் அவள் மீது கொண்ட காதல் வன்மமாக மாறி அவளை கொலை செய்வது, அமிலம் வீசுதல் போன்று உடல்ரீதியிலான துன்புறுத்தல்களை செய்கிறான்.இக்கதையின் இரு கதாபாத்திரத்தையும் இடம் மாற்றி பார்ப்போம், அந்த ஆண் தேர்வுகளில் தேர்ந்து பெருநகரங்கத்திற்கு செல்கிறான், அந்த பெண் தேர்வில் தோல்வி அடைகிறாள் அது அவளை தன் வாழ்வில் பின்னோக்கி இட்டு செல்கிறது மேலும் வீட்டிலேயே அடைபடும் நிலைக்கு தள்ளுகிறது. அந்த ஆண், அங்கு பார்க்கும் உருவத்தில் நல்ல பெண்ணிணன்பால் ஈர்க்கப்பட்டு அவளிடம் காதல் பாராட்டுகிறான், தன் பழைய காதலியிடம் பாராமுகம் காட்டுகிறான். அவள் அவன் மீது கொண்ட பெரும் நம்ம்பிக்கை உடைந்து போன பின் அவள் அவனை தண்டிப்பதற்கு மாறாக அவள் தன்னுயிரை மாய்த்துக்கொள்கிறாள்.இதில் நாம் உணர்ந்து கொள்ளவேண்டியது, உணர்வுரீதியாலான காதல் போன்ற விடயங்களில் பெரிதும் அவதிக்குள்ளாவது பெண்களே.

இதற்கு காரணம் ஆண்களின் இரட்டை நிலைத்தன்மையே, தன் தாயினை புனிதமாக பார்ப்பதும் ஏனைய பெண்களை இழிவாக பார்ப்பதும் தனது அதிகாரத்திற்கு உட்பட்டவர்களாக கருதுவதுமே காரணம். இந்த மனோபாவம் தான், உணர்வுரீதியான விடயங்களிலில் கூட பெண்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடும் ஒரு நிலைக்கு அவர்களைச் சிந்திக்க செய்கிறது.

பெண்களுக்கென ஒரு நாளை ஒதுக்கி அவர்களை சிறப்பிக்கும் இந்நாளில், நாள்தோறும் நாம் சந்திக்கும் பெண்களையோ அல்லது நம்மை சுற்றியுள்ள பெண்களையோ நாம் எவ்வாறு அணுகுகிறோம் அவர்களுக்கு என்ன மரியாதை தருகிறோம், அவர்களது உணர்வு ரீதியிலான முடிவுகளுக்கும், சுதந்திர போக்கிற்கும் எந்த அளவு முக்கியத்துவம் தருகிறோமென நமக்கு நாமே ஒரு சுயதணிக்கை செய்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

இதை முழுவதும் படித்த எனது தோழிகளுக்கும் , தோழர்களின் நட்பு வட்டத்திலுள்ள பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகளை பகிர்ந்துகொள்வதில் மகிழ்வுறுகிறேன்.

உலக மகளிர் தினம். 8, மார்ச்.

PS: Some texts of the article was taken from the speech of writer Ve. Mathimaran.